Monday, March 29, 2010
Saturday, February 13, 2010
என் காதலி..
உறக்கம் தொலைந்த
பின் இரவுகளில்,
தொடர்பறுந்த
பிம்பப் பரிமாணங்களாய்
அவள்!
பணி செய்துகொண்டிருக்கையிலும்
என்னை ஆள்பவள்,
அவள்!
இவ்வுலகை ரசிக்க வைத்தவள்,
அவள்!
மனநிலை மாற்றங்களை
மொத்தமாய் குத்தகைக்கெடுத்தவள்
அவள்!
இன்ப, துன்பங்களின்
காரண கர்த்தா
அவள்!
சிரிக்க,
அழ,
வெட்கப்பட வைப்பவள்,
அவள்!
தாயை,
தாய்மையை
உணர வைப்பவள்
அவள்!
நிகழ், எதிர்கால
'அகர முதல'
அவள்!
நினைவினிலும்,
நிஜத்தினிலும்
என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துக்கொண்டு,
அவள்!!
என் காதலி - அந்த 'அவள்' !!!
-நண்பர் ஒருவரின் கவிதை (அப்படா சுட்டாச்சு !)
Saturday, January 30, 2010
இந்திரா காந்தி
திருப்பூரில் எழாவது புத்தக கண்காட்சி நேற்று (29/01/2010) துவங்கியது ,இரவு ஒன்பது மணியளவில் அங்கே சென்றிருந்த போது கூட்டம் அதிகமில்லை ,ஒரு சில கடைகளில் புத்தகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தர்கள் ,புத்தகங்களை வாங்கியவுடனே படித்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்க தோன்றும் எனக்கு ,இப்போதெல்லாம் வரலாறுகள் அதிகம் படிக்க பிடிக்கிறது ,சென்ற வாரம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை முடித்தபின் நேற்று எனக்கு கிடைத்த புத்தகம் இந்திரா காந்தி ,R.முத்துக்குமார் பல்வேறு புத்தகங்களில் இருந்து தொகுத்து தமிழில் எழுதியது ,புத்தகம் படிக்க நேர்ந்தபோது சில பல கொட்டாவிகளை தவிர்க்க இயலவில்லை (நேரம் மட்டுமே காரணமல்ல) எதையோ எளிதில் முடித்து விட வேண்டிய அவசரம் எழுத்தில் தெரிந்தது .எந்த ஒரு விசயத்தையும் முழுதாக எழுதவில்லை என்பது என் எண்ணம் ,இந்திராவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்புகளில் சஞ்சய் காந்தியின் திருமண நிகழ்வுகளே இல்லை ,
இப்படி சிலகுறைகள் இருந்தாலும் ஒரு முன்னோட்டமாக அறிந்துகொள்ள உதவும் ,விரிவாக படிக்க வேறு புத்தங்கள் இருந்தால் கூறுங்களேன் ..
இந்த புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்
நல்ல யோசனை ஒன்று :எப்படியும் கல்யாண வீடுகளில் தாம்பூலம் கொடுப்பார்கள் தானே ,அதற்கு பதிலாக என் மணவிழாவிற்கு வருவோர்க்கு நான் ஒரு மரக்கன்று தரலாம் என்றுள்ளேன் என்றார் நண்பர் ,நாமும் செயல்படுத்தலாமே .
Thursday, January 28, 2010
லேப்டாப் வாங்கலாம் வாங்க ...
முதலில் லேப்டாப் என்ற சொல் பழைய மாடல் (மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும்) மடிகணினி ஆகும் .இப்போது நாம் உபயோகிப்பவை அதை விட திறமையான அதிநுட்ப மடிகணினி(ultra mobile pc),இந்த மாடல் மடிகணினிகளை வேலையை (விலையையும் ) பொருத்து மூன்று வகைகளாக பிரிக்கலாம்
அவை :
விலை மலிவான வேகம் குறைத்த பெரிய (screen size) கணினிகள்
விலை அதிகமான வேகமும் கொண்ட சிறிய கணினிகள்
விலை குறைத்த வேகம் குறைந்த சிறிய கணினிகள் .
முதல் வகை :
விலை குறைவு என்றால் இவை பெரும்பாலும் (processor),நினைவகம் போன்றவை குறைவாகவும் ஸ்க்ரீன் சைஸ் போன்றவை பெரியதாகவும் இருக்கும் (செலிரான்,பெண்டியம் என்ட்ரி லெவல்) இதன் எடை தோரயமாக இரண்டரை முதல் மூன்றரை கிலோ (பேட்டரி மற்றும் அடாப்டர் சேர்த்து )
ஆர்ட்ஸ் காலேஜ் மற்றும் நார்மல் எக்ஸ்செல் வேலை செய்வோருக்கு இது பொருத்தம் .விலை 24000 முதல்
முதல்வகையில் அதிக திறன் கொண்ட புராசசர் கொண்டு வாங்கும் போது பொறியியல் கல்லூரி மாணவர்களும் இதனை உபயோகபடுத்திகொள்ளலாம் .
இரண்டாம் வகை :
இது அதிக நேரம் உபயோகிப்போருக்கனது ,ஸ்க்ரீன் சைஸ் இதில் சிறியதாகவும் அதிக வேலைப்பலுவை தாங்க கூடியதாகவும் இருக்கும் இதன் எடை ஒன்றரை முதல் இரண்டரை கிலோவாக இருக்கும் ,எடுத்து செல்லுதல் எளிது முன்னதை கட்டிலும் .ஸ்க்ரீன் அளவு பணிரண்டரை முதல் பதினான்கு இஞ்சுகள் வரை ஒரு விலை :28000 முதல்
மூன்றாம் வகை :
விலை குறைவான இன்டெல் மற்றும் பிற கம்பெனி புராசசர் பொருத்தப்பட்ட மடிகணினிகள் (atom),இவற்றின் எடை ஒரு கிலோ முதல் கிடைக்கும் ,வரையறுக்கப்பட்ட உபயோகத்திற்காக மட்டும் இவ்வகை மாடல்களில் அப்டிகல் டிரைவ் சங்கதி இருக்காது ஸ்க்ரீன் அளவு பத்து இன்சுகள் முதல் கிடைகின்றன ,மெயில் மற்றும் சாட்டிங் உபயோகத்திற்கானது விலை 17000 முதல்
ஸ்க்ரீன் சைஸ் குறைவாக உள்ளபோது அதற்கு செலவிடப்படும் மின்சாரமும் குறையும் , பேட்டரி அதிக காலம் வரும் .
மூன்றாம் வகை மாடல் நன்கு மணி நேரம் வரை பேட்டரியில் இயங்கவல்லவை ,முதல் இரண்டும் பேட்டரி மற்றும் உபயோகபடுத்தும் அப்ளிகேசன்களை பொருத்து மாறுபடும் .
மைக்கேல் மதன காமராஜன்
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
மேலதிக தகவல்களுக்கு nagaraj.dpm@gmail.com க்கு எழுதவும்
Monday, January 25, 2010
சோழர்
சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.
தோற்றமும் வரலாறும்
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குலங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களை அண்டிய காலப் பகுதிகளைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ சாத்தியமாகவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற விபரங்கள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
சோழர்களின் ஆட்சி
ஆட்சிமுறை
சங்க காலத்தில் இருந்து வழங்கிவருவதாக அறியப்பட்ட மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர்.
அரசுரிமை
அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
உள்ளாட்சிப் பிரிவுகள்
பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.
மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.
குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.
சமூகநிலை
பெண்டிர்
சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச முடுபத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
உடன்கட்டை ஏறுதல்
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை.
பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மூலம் கிடைப்பதால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகயிருக்கிறது.[3]
ஆடல் மகளிர்
இந்திய சமூக வாழ்வில் என்றுமே ஆடல் மகளிர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே ஆடள் மகள் கவர்ச்சிக் கன்னியராகவே திகழ்ந்தாள். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.
அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வுடையவர்களாயும் கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சோழரும் சாதியமும்
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.
சோழர் இலக்கியங்கள்
அடிமைகள்
சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[6] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாட்டு வணிகம்
சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் விரிவான கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும் ஆதிக்கம் பெற்றிருந்த சோழர்கள், இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். சீனாவின் டாங் வம்சம் (Tang dynasty), சைலேந்திரர்களின் கீழிருந்த, மலாயத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு, பாக்தாத்தின், அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) என்பன இம்முயற்சிகளில் சோழர்களின் கூட்டாளிகளாக இருந்தன.
சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்கிகளுக்குச் சான்றாக அமைகின்றது.
சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.
பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டு பல நாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.
கலைகள்
சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதனால், இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
சோழர் காலம், வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
கல்வி
சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.
இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[
மொழி
சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". [
இலக்கியம்
சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஜைன, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
மூன்றாம்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார்.
சமயம்
சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். முற்காலச் சோழராயினும், பிற்காலச் சோழராயினும், பௌத்த, சமண மதங்களின் செல்வாக்கால் கவரப்பட்டவர்கள் அல்லர். எனினும் அவர்கள் ஏனைய சமயத்தவர்கள் தொடர்பில் எம்மதமும் சம்மதம் என்ற போக்கையே கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைஷ்ணவர்பால், சிறப்பாக இராமானுஜர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராஜேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.
அரசன் பெயர் | ஆட்சியாண்டுகள் | யாருடைய மகன் | தலைநகரம் |
---|---|---|---|
விசயாலய சோழன் | 848-871 | அறியவில்லை | தஞ்சாவூர் |
ஆதித்த சோழன் | 871-907 | விசயாலய சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் பராந்தக சோழன் | 907-955 | ஆதித்த சோழன் | தஞ்சாவூர் |
கண்டராதித்த சோழன் | 950-957 | முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
அரிஞ்சய சோழன் | 956-957 | முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் | தஞ்சாவூர் |
இரண்டாம் பராந்தக சோழன் | 957-970 | அரிஞ்சய சோழன் | தஞ்சாவூர் |
ஆதித்த கரிகாலன் | 957-969 | சுந்தர சோழன் | காஞ்சிபுரம் |
உத்தம சோழன் | 973-985 | கண்டராதித்த சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் இராஜராஜ சோழன் | 985-1014 | இரண்டாம் பராந்தக சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் ராஜேந்திர சோழன் | 1012-1044 | முதலாம் ராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
முதலாம் ராஜாதிராஜ சோழன் | 1018-1054 | முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் ராஜேந்திர சோழன் | 1051-1063 | முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
வீரராஜேந்திர சோழன் | 1063-1070 | இரண்டாம் ராஜேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
அதிராஜேந்திர சோழன் | 1067-1070 | வீரராஜேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
முதலாம் குலோத்துங்க சோழன் | 1070-1120 | முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
விக்கிரம சோழன் | 1118-1135 | முதலாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் குலோத்துங்க சோழன் | 1133-1150 | விக்கிரம சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் ராஜராஜ சோழன் | 1146-1163 | இரண்டாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் | 1163-1178 | இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1178-1218 | இரண்டாம் ராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராஜராஜ சோழன் | 1216-1256 | மூன்றாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராஜேந்திர சோழன் | 1246-1279 | மூன்றாம் இராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இளஞ்சேட்சென்னி,
பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர்[1] என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்[2] என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இவன்காலத்துப் பிற மன்னர்கள்
வெல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னனும், பாண்டிய மன்னன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவனும் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கரிகால் சோழன்
கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்[1][2].
புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
வெண்ணிப்போர்
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.
இந்த அணை ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.
கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.
புராணக்கதைகள்
பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.
சமயம் இறப்பு
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.
நெடுங்கிள்ளி
முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.
கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.
நலங்கிள்ளி
நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.
புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.
அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)
தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.
பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)
இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது.
இந்தபதிவு எனக்கு மின்னஞ்சலில் வநதது உரிமை :இதை எழுதியவருக்கே